கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
கோடை சீசனை ஒட்டி, உதகையில் மே 30ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
கோடை சீசன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, உதகையிலிருந்து கோவை மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உதகை வரும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு வாகனங்கள் தவிர, மற்ற அனைத்து கனரக வாகனங்களும் இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உதகை நகருக்குள் வர அனுமதி இல்லை.
மேலும், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் உதகை ஆவின் நிறுவனத்தில் வாகனங்களை நிறுத்தி, அங்கிருந்து சுற்றுலாப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், உதகை HPF எமரால்ட் ஹைட்ஸ் மகளிர் கல்லூரி அருகே வாகனங்களை நிறுத்தி, அங்கிருந்து சுற்றுலாப் பேருந்துகள் மூலம் உதகை நகர் மட்டுமின்றி, சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், உள்ளூரில் உள்ள மக்கள் நான்கு சக்கர வாகனங்களை வருவதை தவிர்த்து, இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வருகிற 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அடிப்படை வசதிகள் சரியான முறையில் உள்ளதா என தனியாக குழு அமைத்து, நாள்தோறும் பார்வையிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
கோடை சீசனில் உதகையில் பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் 600 பேரும், நீலகிரியில் 400 பேர் என மொத்தம் 1,000 காவல்துறையினர் காலை, மாலை என இரு வேளையிலும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.