உதகையில் இடம் மாற்றம் செய்யப்பட்ட மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் வேண்டும்
உதகை மார்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மைதானத்தில் அடிப்படை தேவைகள் செய்து தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உதகை நகராட்சி மார்க்கெட்டில் இயங்கிவந்த 160 காய்கறி கடைகள் இன்று நகரில் உள்ள சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர் குறிப்பாக மைதானத்தில் அதிகமாக பெண்கள் வியாபாரம் செய்வதால் கழிவறை வசதிகள், கடைகளுக்கு மேற்கூரை அமைத்தல், பொருட்களுக்கு பாதுகாப்பு, மின் வசதி,உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் எதுவும் இல்லை என தெரிவித்தனர்.
எனவே அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தால் மட்டுமே இங்கு கடைகள் வைக்க முடியும் எனவும் இல்லையெனில் மார்க்கெட் பகுதியில் தங்களுக்கு சுழற்சிமுறையில் கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக காலை 6 மணி முதல் 12 மணி வரை காய்கறி கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மார்க்கெட் பகுதியில் இருந்து பொருட்களை மைதானத்திற்கு எடுத்து வரவே இரண்டு மணி நேரம் ஆகும் எனக் கூறும் வியாபாரிகள் இரண்டு மணி நேரத்தை அதிகப்படுத்தி கொடுத்தால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காது தெரிவிக்கின்றனர்.