காட்டேரி பூங்காவில் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது.;
நீலகிரி மலை மாவட்டம் என்பதால் சுற்றுலா தளங்கள் அதிக அளவு உள்ளன. இதன் காரணமாக ஆண்டு முழுவதும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றனர். குன்னூரை பொறுத்தமட்டில் சுற்றுலா தளங்களாக சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, இயற்கை காட்சி முனைகளான லேம் ஸ்ராக்டால்பின் நோஸ் போன்றவை உள்ளன.
குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது காட்டேரி பூங்கா. இப்பூங்கா இயற்கை எழில் சூழ்ந்து அருவிகளின் அருகே அமைந்துள்ளதால் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைவதுடன், ஏராளமான பறவைகளும் உலாவருகின்றன.
திருமண நிகழ்ச்சி புகைப்படக் கலைஞர்களின் முக்கிய இடமாக காட்டேரி பூங்கா உள்ளது. குறிப்பாக திருமணமான தம்பதிகளை புகைப்படங்கள் எடுக்க மற்ற மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் பூங்காவிற்கு அழைத்து வருகின்றனர்.
பூங்கா அருகில் ரண்ணிமேடு ரயில்நிலையம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள சுவரோவியங்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர், இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை காட்டிலும் இதுபோன்ற திருமண நிகழ்ச்சி புகைப்படத்திற்காக அதிகளவில் மக்கள் காட்டேரி பூங்காவிற்கு வந்துசெல்கின்றனர்.
இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.
இங்கு இந்த ஆண்டு முதல் பருவத்திற்கான மலர் செடிகள் நடவு செய்யும் பணியினை தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரோஸ் பேகம், இன்று துவக்கி வைத்தார்.
வரும் ஏப்ரல் மே மாதம் கோடை சீசன் துவங்க உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் மேரி கோல்டு, பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்கா வகை பிளாக்ஸ், சூரியகாந்தி, ஆண்ட்ரினம், பெட்னியம், பால்சம், பெகோனியா, போன்ற முப்பது வகை மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நகர்லாந்து, கொல்கத்தா, காஷ்மீர், போன்ற இடங்களில் இருந்து பெறப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த 2023- 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 711 சுற்றுலா பயணிகள் காட்டேரி பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர் என்றும் அதேபோல் வரும் ஏப்ரல் மே மாதம் நடைபெற உள்ள கோடை சீசனுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரோஸ் பேகம் தெரிவித்தார் நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, மற்றும் தோட்டக்கலை அலுவலர் (பொறுப்பு) சபாரத்தினம், மற்றும் பண்ணை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.