குன்னூரில் மழை பாதிப்பு முகாமில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் வழங்கினார்

நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.;

Update: 2023-11-11 14:23 GMT

நிவாரண உதவிகளை வழங்கும் அமைச்சர் ராமச்சந்திரன் 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட மேல்பாரத் நகர் பகுதியை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குன்னூர், கல்குழி மேல்பாரத் நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை சேதம் அடைந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் உள்ள 8 குடும்பங்களைச் சேர்ந்த 23 நபர்கள் அருகில் உள்ள நிவாரண முகாமான மேல்பாரத் நகர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், மளிகை பொருட்களும், போர்வை, பெட்சீட் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் சார்பில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மழை காரணமாக மேல்பாரத் நகர் பகுதியில் சேதம் அடைந்த தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை சீர் செய்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்

முன்னதாக அமைச்சர் ராமச்சந்திரன் நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமார மங்கலம், ஆறுமுகம், வட்ட வழங்கல் அலுவலர் வசந்த்குமார், பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசுன், துணை தலைவர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News