முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது. இன்று காலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யபப்ட்டார்

Update: 2023-11-06 09:28 GMT

பைல் படம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 108 அவசர ஆம்புலன்ஸ் அவசர சேவை மையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு இந்த மையத்தில் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது ஒருபோன் அழைப்பு வந்தது.

பணியில் இருந்த நபர் போனை எடுத்து பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சியான ஊழியர், அவரிடம் நீங்கள் யார் என்று விசாரித்தார். ஆனால் அதற்குள் அந்த நபர் தனது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து, அங்கிருந்த ஊழியர் சம்பவம் குறித்து ஊட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் சென்னைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடங்களில் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.

சோதனையில் குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு சென்று போன் வந்த நம்பரை வைத்து அது யாருடையது? எங்கிருந்து வந்தது என விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போனில் கூறியது ஊட்டி அருகே உள்ள தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பது தெரியவந்தது.

இன்று காலை ஊட்டி தாம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்த கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்ததால் 108 அவசர சேவை மையத்திற்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News