கொடநாடு வழக்கு விசாரணை பிப்ரவரி 9-க்கு ஒத்திவைப்பு
குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், கூடுதல் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி கோரியதையடுத்து விசாரணை ஒத்திவைப்பு .;
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய மூவரும் ஆஜராகி இருந்தனர்.
அப்போது சி.பி.சி.ஐ.டி தரப்பில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜின்குட்டி, திபு உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் செல்போன், வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்வதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர்அனுப்பி வைத்துள்ளனர்.
அங்குள்ள ஆய்வகத்தில் இவர்களின் பேச்சுக்கள், உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அதில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் காவல் துணை கண்காணிப்பாளர் .மாதவன் தலைமையிலான காவல்துறையினர் அகமதாபாத்திலேயே முகாமிட்டுள்ளனர்.
இந்த உரையாடல்களில் பேசப்பட்டது என்ன என்பது தெரியவரும் பட்சத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும்.