நீலகிரியில் விடிய, விடிய கனமழை: ராட்சதபாறைகள் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

Update: 2023-11-10 13:05 GMT

கோத்தகிரி சாலையில் மழை காரணமாக சாலையில் விழுந்த பாறை 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கால நிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

நேற்றிரவும் கோத்தகிரி, குன்னூர், அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது.

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், கோத்தகிரி-மேட்டுப்பாளையம், சாலை, குன்னூர் சாலை, ஊட்டி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை என்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண் திட்டுகள், பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்திட்டுக்கள், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜே.சி.பி.எந்திரம் கொண்டு ராட்சதபாறைகள் அகற்றும் பணி நடைபெற்றது. மேலும் மண்திட்டுகளை ஒழுங்குபடுத்தி சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட தாலூக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது

Tags:    

Similar News