கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்: குடியிருப்புவாசிகள் கலக்கம்
கூடலூர் கலிங்கரை பகுதியில் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.;
நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்லிங்கரை என்னும் பகுதியில் இன்று அதிகாலை 6 மணிக்கு, ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் ஆட்களைத் துரத்திச் சென்றன. இதனால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். யானைகள் நடமாட்டம் குறித்து, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வனத்துறை வாகனம் மூலம் ஒலியெழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது கூடலூர் பகுதிகளில் அதிகளவில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், வனத்துறையினர் முகாமிட்டு, தீவிரமாக கண்காணித்து யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, வன விலங்குகள் நடமாட்டத்தால், அதிகாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி உள்ளிட்ட வெளி நடமாட்டத்தை தவிர்க்க வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.