நாடாளுமன்றத் தேர்தல் 2024: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா அபார வெற்றி
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 4,73,212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.;
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 4,73,212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நீலகிரி தொகுதி:-
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டார். திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா களம் கண்டார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியானது.
திமுக வேட்பாளர் ஆ.ராசா ஏற்கனவே இந்த தொகுதியில் 2 முறை வெற்றி கண்டவர். அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். மொத்தம் 16 வேட்பாளர்கள் களம் கண்டனர். நீலகிரி தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 28 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 10 லட்சத்து 13 ஆயிரத்து 410 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு 70.95 சதவீதம் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை:-
இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி பதிவான வாக்குகள் அரசு கல்லூரியில் வைத்து இன்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போது, இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திமுக வேட்பாளர் வெற்றி:-
அந்த வகையில், திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 4,73,212 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளர் எல்.முருகனை 2,40,285 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், தற்போது இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளர் பெற்ற வாக்குகள் விவரம்:-
திமுக வேட்பாளர் ஆ.ராசா - 4,73,212,
பாஜக வேட்பாளர் எல்.முருகன் - 2,32,627,
அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் - 2,20,230,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் - 58,821.