எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லனாலும் ஆளுறேன்: மழையால் முதுமலை வனவிலங்குகள் குஷி!
முதுமலையில் பெய்து வரும் மழையால் சாலையோரங்களில் யானை, மான், அரிய வகை கருங்குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் தென்படுகின்றன.
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் மழையின் தாக்கம் அடியோடு குறைந்தது. இதனால் வறட்சியின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களாக கூடலூர் முதுமலை வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. பசுமை திரும்பியதை அடுத்து, வனவிலங்குகள் உற்சாகமடைந்துள்ளன. யானைகள், மான்கள், மயில்கள்,.சாலையோரத்தில் சுதந்திரமாக உலா வருகின்றன.
முதுமலையின் பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் கூட்டமாக தென்படுகிறது. இதேபோல் வனப்பகுதியில் உள்ள நாவல் பழங்கள், மரங்களில் நன்கு காய்த்து உள்ளதால், அரிய வகை கருங்குரங்கு, மலை அணில் உள்ளிட்டவைகளும் கூட்டமாக மரங்களில் காணமுடிகிறது .
தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்களின் குறுக்கீடு இல்லாமல், வனவிலங்குகள் 'ஜாலி'யாக நடமாடிவருவது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.