குன்னூர் அருகே மீண்டும் விபத்து: மலைப்பாதையில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து
தற்போது விபத்து நடந்துள்ள இடத்துக்கு அருகே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது;
தொடர் விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் தனியார் பேருந்தில் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர். ஊட்டியில் பல்வேறு இடங்களை பாரவையிட்ட அவர்கள் ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர்.
அதன்படி இரவு ஊட்டியில் இருந்து அவர்கள் பேருந்தில் புறப்பட்டனர். பேருந்தை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டினார். குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அந்த பேருந்து வந்து கொண்டு இருந்தபோது, பர்லியார் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பேருந்தில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை விட்டு விலகி பள்ளத்தில் இருந்த பெரிய மரத்தில் பேருந்து மோதி நின்றது. அந்த இடத்தில் இருந்த மரம் பேருந்தை தாங்கி பிடித்துக்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் பேருந்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். யூனுஸ்கான் என்ற 13 வயது சிறுவன் பேருந்தின் கதவில் சிக்கி தவித்தான். அவனையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அந்த சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிறுவன் யூனுஸ்கான் கோவை அரசு மருத்துவமனைக்கும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான பேருந்து உடனடியாக மீட்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் கொண்டை ஊசி வளைவுகளில் கல்லட்டி மலை பாதையில் போடப்பட்டுள்ள ரப்பர் தடுப்புகள் போன்று இந்தச் சாலையிலும் அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தற்போது விபத்து நடந்துள்ள இடம் அருகே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். அந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் அதன் அருகே மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.