பந்தலூர் பகுதியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது
கடந்த இரண்டு மாதங்களாக அட்டகாசம் செய்த கரடியை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர், உப்பட்டி, அத்திகுன்னா, பந்தலூர் இரும்பு பாலம், இன்கோ நகர், காலனி அட்டி, நெல்லியாளம் டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கரடி ஒன்று சுற்றி திரிந்து வந்தது.
குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் கரடி, வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வந்தது. குறிப்பாக வீட்டில் உள்ள எண்ணை உள்ளிட்டவற்றை உடைத்து குடித்து வந்தது.
தொடர்ந்து இதுபோன்று கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார், உதவி வனபாதுகாவலர் கருப்பையா, தேவாலா வனசரகர் சஞ்சிவி, பிதர்காடு வனசரகர் ரவி மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து, கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ள அத்திகுன்னா, அத்திமாநகர், புவலம்புழா உள்பட 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அத்திமாநகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில், கரடி சிக்கியது. கரடி சிக்கிய தகவலை வன ஊழியர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கால்நடை டாக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் பிடிபட்ட கரடியின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்று முதுமலை வனப்பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் கரடியை விடுவித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக அத்திகுன்னா, நெல்லியாளம் டேன்டீ, பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.