மாற்று இடத்தில் மார்க்கெட் , சேறும் சகதியுமாக - பொதுமக்கள் அவதி
காய்கறிகள் சேதம் - வியாபாரிகள் வேதனை
உதகையில் மாற்று இடத்தில் இயங்கி வரும் மார்க்கெட் பகுதியில் கனமழை காரணமாக சேறும் சகதியுமாக காணப்படுவதால் மக்கள் அவதி. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் சேதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் நீலகிரியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட் பகுதிகள் உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டன.
இதில் ஊட்டி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த 160 காய்கறி கடைகள் நகரிலுள்ள சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
காய்கறி கடைகள் மைதானத்திற்கு மாற்றும்போது வியாபாரிகள் மேற்கூரை அமைக்கவும் கழிவறைகள் ஏற்படுத்தித் தரவும் மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும், ரெட்அலர்ட் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது.
இதனால் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் அவதியுற்றனர்.
வியாபாரிகள் கூறும் பொழுது, கடைகள் செயல்பட மாற்று இடம் வழங்கப்படும்போது அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை வைத்திருந்ததாகவும், தற்போது வரை அந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதால் பொருட்கள் சேதம் ஆவதோடு மைதானமும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் முற்றிலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எனவே, நாளை மறுதினம் திங்கட்கிழமை தங்களுக்கு மார்க்கெட் பகுதியிலேயே கடைகளை திறக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உத்தரவாதம் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.