நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஆர்பாட்டம்
உயர் அழுத்தம் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு, நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மூன்றாம் நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து புகழூர் வரை 800 கிலோ வாட் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் பணி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த மின் கோபுரத்தை அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அரசு அறிவித்தபடி வழங்க வேண்டிய நிவாரணத் தொகை வழங்காமல் நிறுத்தி உள்ளது. நில மதிப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் உயர் மின்னழுத்த கோபுரம் போடும்போது இருந்த பயிர்கள் போன்றவற்றிற்கு இதுவரை இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் இதனை கண்டித்தும் மூன்றாம் நாளாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கீழ் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குறைவான நில மதிப்பீட்டை வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்லூர் பகுதி விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.