கொல்லிமலையில் கர்ப்பிணிப் பெண் திடீர் சாவு: உதவி கலெக்டர் விசாரணை
கொல்லிமலையில் கர்ப்பிணி பெண் திடீர் மரணம் குறித்து, நாமக்கல் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.;
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள சேலூர்நாடு பஞ்சாயத்து, முடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (32), விவசாயி. இவருடைய மனைவி ரேவதி என்கிற கோமதி (24). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோமதி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
அவருக்கு ஏற்கனவே கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்துள்ளது. மீண்டும் கர்ப்பமடைந்ததால் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலை திடீரென்று, அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த கோமதி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவரது கணவர் குப்புசாமி மற்றும் உறவினர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் கோமதியின் சடலத்தை புதைத்துவிட்டனர்.
இதை அறிந்த சேலூர்நாடு விஏஓ கிருஷ்ணகுமார் வாழவந்திநாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கோமதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.