கொல்லிமலையில் தடையை மீறி மது அருந்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
கொல்லிமலையில் தடையை மீறி மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.;
நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில், வன பாதுகாப்பு படையினருடன் இணைந்து வனத்துறையினர் கொல்லிமலை வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கூட்டுச் சோதனையில், நாமக்கல் வனச்சரகர் பெருமாள், வனவர் சந்திரசேகர், வனக் காப்பாளர்கள் சரவணப் பெருமாள், பிரவீண் உள்ளிட்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கொல்லிமலைப் பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகளில் அத்துமீறிச் சென்று குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சோதனையின்போது, கொல்லிமலை மலைப்பாதையில், 27-வது கொண்டை ஊசி வளைவில் சேலம் மாவட்டத்தைச் சோர்ந்த இருவர், வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததைக் கண்ட வனத்துறையினர், அவர்களுக்கு தலா ரூ. 500 வீதம் அபராதம் விதித்தனர்.
வனப்பகுதிகளில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரகர் பெருமாள் தெரிவித்துள்ளார்.