விபத்தில் பலியானவர் உடலை வழங்க மருத்துவமனை மறுப்பு: உறவினர்கள் சாலை மறியல்

போலீசார் கடிதம் இல்லாமல் விபத்தில் இறந்தவர் உடலை தர மருத்துவமனை மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியல். மோதியவரை கைது செய்ய வலியுறுத்தல்

Update: 2021-08-11 03:15 GMT

சேந்தமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியன சம்பவத்தில், போலீசாரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (72). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு கருப்பண்ணன் துத்திக்குளம் தபால் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக கருப்பண்ணனின் உறவினர்கள் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், கருப்பண்ணன் மீது மோட்டார் சைக்கிளை மோதியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருப்பண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடலை உறவினர்கள் வாங்க சென்றபோது, சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாரின் கடிதம் இருந்தால் தான் உடலை கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த, அவரது உறுவினர்கள் மற்றும் பொதுமக்கள் துத்திக்குளத்தில் சேந்தமங்கலம் - ராசிபுரம் ரோட்டின் நடுவே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்குவந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கருப்பண்ணன் மீது மோட்டார் சைக்கிளை மோதியவர் மீது வழக்குப்பதிவு செய்து, சேலம் ஆஸ்பத்திரியில் இருந்து அவரின் சடலத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News