சேந்தமங்கலம் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சேந்தமங்கலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
சேந்தமங்கலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேந்தமங்கலம் தாலுக்கா, பச்சுடையாம்பட்டி கிராமத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை என பொது குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அப்போது, சுமார் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வருவதால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. அங்குள்ள 7 போர்வெல் கிணறுகளில் இருந்து வெளி இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாகவும், அந்த தண்ணீரை அருந்ததியர் தெரிவிற்கு வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. சீரான குடிநீர் வழங்கக்கோரி பல முறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட அருந்ததியர் தெரு பொதுமமக்கள், புதன்சந்தை செல்லும் மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும், சேந்தமங்கலம் பிடிஓ பாஸ்கர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மணிமாலா, ஆர்ஐ தங்கராஜ், விஏஓ சத்தியசீலன், பஞ்சாயத்து தலைவர் திலகம், போலீஸ் எஸ்ஐ மோகன்ராம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், போர்வெல் கிணறுகளில் இருந்து அருந்ததியர் தெருவிற்கு தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.