500 ரூபாய் தகராறில் கத்தி குத்து: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, 5000 அபராதம்!
500 ரூபாய் தகராறில் கத்தியால் குத்திய வாலிபருக்கு நாமக்கல் கோர்ட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
500 ரூபாய் தகராறில் கத்தியால் குத்திய வாலிபருக்கு நாமக்கல் கோர்ட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேந்தமங்கலம் ஒன்றியம், முத்துகாப்பட்டி மேதர்மாதேவியை சேர்ந்தவர் செல்வராஜ் (49). அவரது மகன் கார்த்திக் (26). அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் ராஜேஸ்குமாரிடம், செல்வராஜ், சீமைக்கருவேள் முள் கட்டைகளை ரூ.1,000க்கு வாங்கி உள்ளார். அட்வான்சாக ரூ. 500 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். கடந்த, 2014ம் ஆண்டு டிச. 23ம் தேதி, செல்வராஜ், அவரது மகன் கார்த்திக் இருவரும், மொபட்டில் முத்துகாப்பட்டி வந்தனர். அங்குள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் ராஜேஸ்குமார், அவரது அண்ணன் அர்ச்சுணன் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அர்ச்சுணன், என் தம்பிக்கு தரவேண்டிய மீதி தொகை ரூ.500 ஏன் தரவில்லை என கேட்டார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். ஆத்திரம் அடைந்த கார்த்திக், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அர்ச்சுணனை குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். பலத்த காயமடைந்த அர்ச்சுணன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜ், கார்த்திக் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடந்தது. 7 ஆண்டுக்குப் பின் விசாரணை முடிவுற்று, நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்குக்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திக் கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.