கொல்லிமலையில் பெண் மர்மச்சாவு: உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை
கொல்லிமலையில் மர்மமான முறையில் இறந்து அடக்கம் செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.;
கொல்லிமலையில் மர்மமான முறையில் இறந்து அடக்கம் செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல், தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம் சேலூர் நாடு பஞ்சாயத்து, ஊர்முடிப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (32), விவசாயி. இவருடைய மனைவி ரேவதி என்கிற கோமதி (24). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோமதி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு திடீரென இறந்துவிட்டதாக தெரிகிறது. அவரது குடும்பத்தினர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் உடலை புதைத்துவிட்டனர்.
இது குறித்து விஏஓ கிருஷ்ணகுமார் புகாரின் பேரில், வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோமதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆனதால், இது குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தினார்.
அவரது உத்தரவின்பேரில் கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் முன்னிலையில் கோமதியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோனை அறிக்கையின் அடிப்படையில் அவருடைய உயிரிழப்பு குறித்து மீண்டும் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.