அடர்வனம் உருவாக்கும் திட்டம்: அனைவரும் பங்கேற்க கலெக்டர் வேண்டுகாேள்
நாமக்கல் மாவட்டத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.;
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே அடர்வனம் உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
சேந்தமங்கலம் தாலுக்கா, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், அலங்காநத்தம் கிரமத்தில் வனம் உருவாக்கி பூமியை காக்கும் பசுமைத் திருவிழா நடைபெற்றது. நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது:
அடர் வனம் உருவாக்கும் திட்டத்தை அனைவரும் சேர்ந்து செயல்படுத்தி, அதிக மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது என்பது மகிழ்ச்சியான செயலாகும். இதைப் பலரும் இணைந்து செயல்படுத்துவது மிகச் சிறந்த செயலாகும். முன்காலத்தில் ஊர் பகுதிகளில் ஆலமர நிழலில் பலர் கூடி பேசுவது வழக்கம் இருக்கும்.
தற்போதைய சூழ்நிலையிலும் மரங்கள் நிறைந்த இயற்கை சூழலை பலரும் விரும்புகின்றனர். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்திட மரங்கள் வளர்ப்பது மிக முக்கியமானதாகும். மரத்தை நடும் போது அது ஒரு நாள் செயலாக மட்டும் இல்லாமல். பல ஆண்டுகள் சென்ற பின்பு கூட நமக்கும், நம் குடும்பத்தாருக்கும் ஒரு அடையாளமாக நாம் நட்ட மரம் என்று பெயர் சொல்லும்.
வரும் காலத்தில் நீரின் தேவையை கருத்தில் கொண்டு இயற்கையை நாம் பாதுகாத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் காடுகளின் பசுமை பரப்பளவை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்தோடு தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில் வணிக நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மரம் நட்டு அடர் வனம் உருவாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இயற்கையை பாதுகாத்திட அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் எருமப்பட்டி பிடிஓக்கள் குணாளன், அருளாளன், பசுமை நாமக்கல் தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் தில்லைசிவக்குமார், பொருளாளர் சிவப்பிரகாசம், பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.