'புடவையில் ஓர் பயணம்' ராசிபுரத்தில் மகளிர் விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் சார்பில் 'புடவையில் ஓர் பயணம்' என்ற பெயரில் மகளிர் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது

Update: 2023-03-12 07:00 GMT

ராசிபுரம் இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற, மகளிர் விழிப்புணர்வு பேரணியை, நகராட்சித்தலைவர் கவிதா, போலீஸ் எஸ்.ஐ. சுரேஷ், ரோட்டரி சங்கத்தலைவர் கருணாகர பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்

ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின், இன்னர்வீல் சங்கம் சார்பில் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, மகளிருக்கான 4 கி.மீ. தொலைவு விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று காலை நடைபெற்றது. பெண் கல்வி, மகளிர் நலம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மகளிர் புற்றுநோய் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாரம்பரிய உடைகளின் பெருமையை மீட்டெடுக்கும் வகையிலும், புடவையில் ஒர் நடைப்பயணம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

வயது அடிப்படையில் 1.கி.மீ., 3 கி.மீ., 4 கி.மீ. ஆகிய தொலைவில் மொத்தம் 3 பிரிவுகளாக இந்த நடைபயணம் நடைபெற்றது. ராசிபுரம் ஸ்ரீவித்யா நிகேதன் மெட்ரிக்பள்ளி முன்பாக துவங்கிய நடைபயண பேரணியை ராசிபுரம் நராட்சித் தலைவர் கவிதா சங்கர், காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், ரோட்டரி சங்கத் தலைவர் கே.எஸ். கருணாகர பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சிவானந்தா சாலை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சாமுண்டி திரையரங்கு வழியாக பட்டணம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் திரளான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கலந்துகொண்டனர். பெண்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவை அணிந்து பதாகைகளை ஏந்திச்  சென்றனர், வழி நெடுகிலும் பொதுமக்களுக்கு அவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். பேரணியின் முடிவில், மூன்று பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவு விழாவில் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

விழிப்புணர்வு நடை பயணத்திற்கான ஏற்பாடுகளை, இன்னர்வீல் சங்கத் தலைவர் தெய்வானை ராமசாமி , செயலாளர் சரோஜா குமார் மற்றும் இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News