இராசிபுரம் ஒன்றியத்தில் ரூ.83.22 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: அமைச்சர் ஆய்வு
இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.83.22 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும், பஞ்சாயத்து அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அங்கன்வாடி மையம் அமைத்தல், பள்ளி கட்டிடம் அமைத்தல், சாலை பணி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட 124 வளர்ச்சித் திட்டப் பணிகள் ரூ.8.25 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அரசம்பாளையம் பஞ்சாயத்தில், ரூ.22.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலக கட்டிட பணிகளையும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கட்டிடப் பணிகளையும், ரூ.1.17 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட நூலகத்தையும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மலையம்பட்டிதுவக்கப் பள்ளி வரை தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.90 லட்சம் மதிப்பில் 1,250 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார்சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் குருக்கபுரம் பஞ்சாயத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பில் வண்டிபேட்டை மயானத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும், அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராசிபுரம் ஊராட்சி ஒன்றி தலைவர் ஜெகநாதன், ராசிபுரம் பிடிஓ வனிதா, உதவி பொறியாளர் சிவகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.