தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகள் வழங்கிய எம்பி

ராசிபுரம் அருகே நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு பெற்றவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.

Update: 2023-11-26 02:45 GMT

ராசிபுரம் அருகே நடைபெற்ற, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் உமா.

ராசிபுரம் அருகே நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு பெற்றவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றம் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ராசிபுரம் தாலுகா, காக்காவேரி முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில், மாவட்ட அளவிலான, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் மூலம் நடைபெற்ற, இலவச பயிற்சியில் கலந்து கொண்டு அரசு பணி பெற்ற 6 இளைஞர்களை பாராட்டி, பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து மகளிர் திட்டத்தின் மூலம் உதவி நர்சிங் பயிற்சி பெற தேர்வாகியுள்ள 10 மாணவிகளுக்கு உத்தரவு கடிதங்களை வழங்கி விழாவில் ராஜேஷ்குமார் எம்.பி. பேசியதாவது:

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் நடத்தப்பட்ட 30 சிறிய அளவிலான முகாம்களில் 362 வேலையளிக்கும் நிறுவனங்களின் மூலம் 2,469 வேலைநாடுநர்களுக்கும், 3 பெரிய அளவிளான முகாமில் 468 நிறுவனங்களின் மூலம் 1,447 மனுதாரர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களில் 50 நபர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதுபோன்ற வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்து 5 வருடங்கள் பூர்த்தி அடைந்த பதிவுதாரர்களுக்கும், வேலைவாய்ப்பு பதிவு செய்து 1 வருடம் பூர்த்தி அடைந்த மாற்றுத்திறனாளி வேலையற்ற பதிவுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 30.9.2023-ன்படி 1,153 பொது பதிவுதாரர்களுக்கு நடப்பு காலாண்டு வரை ரூ.17,44,500 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 79 மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு கடந்த மாதம் வரை மொத்தம் ரூ.5,46,050 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவர் ஜெகநாதன், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, சேலம் மண்டல வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர் லதா, முத்தயாம்மாள் கல்லூரி முதல்வர் மாதேஸ்வரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News