தேர்தல் வாக்குறுதிகளை மறந்த திமுக: தங்கமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை மறந்து விட்டது என, முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-10-08 02:15 GMT

வெண்ணந்தூரில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பேசினார்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியப் பகுதியில் உள்ள, மாவட்ட ஊராட்சிக்குழு 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக போட்டியிட்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்றார். ஆட்சிக்கு வந்த பிறகோ, 2 ஏக்கர் நிலம் இல்லை என்கிறார். இதுபோல கடந்த தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை கூறி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆகியுள்ளார்.

முதியோர் உதவித்தொகை மாதம் ரூ. 1,500 வழங்கப்படும்; மகளிருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதாக கூறினார்.  கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி, விவசாயக்கடன் தள்ளுபடி எனக் கூறினார்கள். எதையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை திமுக மறந்து விட்டது. வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News