ராசிபுரத்தில் முன்விரோதத்தால் கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
ராசிபுரத்தில் அருகே முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் குமரன் மகன் கார்த்தி (34). மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சுப்ரமணி என்பவர் குடும்பத்தாருக்கும் இடையே, திருவிழாவில் தேர் இழுக்கும்போது, தேர் சக்கரத்துக்கு சன்னக்கட்டை போடுவதில், 2 ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்தது. 2012ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி, குமரனுக்கும் சுப்ரமணியின் இரண்டாவது மகன் துரைசாமிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, துரைசாமி, கனகராஜ், சுப்ரமணி, துரைசாமியின் அம்மா பேபி ஆகியோர் தகராறு செய்தனர்.
இது தொடர்பாக, ராசிபுரம் போலீசில் புகார் செய்வதற்காக கார்த்தி, அவரது தந்தை குமரன், மாமனார் நடராஜ், மைத்துனர்கள் மாதேஸ், முருகன் ஆகியோர் சென்றனர். அப்போது எதிரே வந்த சுப்ரமணி, அவரது மகன்கள் துரைசாமி, குமரேசன், மனைவி பேபி மற்றும் கனகராஜ் ஆகியோர் வழிமறித்து சரமாரியாக தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த நடராஜன் (53) உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கனகராஜ் (26), குமரேசன் (27), சுப்ரமணி (51), பேபி (45), துரைசாமி (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுந்தரய்யா தீர்ப்பளித்தார். அதில், சுப்ரமணி அவரது மகன் குமரேசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டையும் ரூ.3,500 அபராதமும், துரைசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். குற்றவாளிகளில் கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டார். கைது செய்யப்பட்ட பேபி விடுதலை செய்யப்பட்டார்.