தங்கைக்காக தன் உயிரையே கொடுத்த புது மாப்பிள்ளை; பரமத்திவேலூரில் பரிதாபம்
பரமத்திவேலூரில் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச்சென்ற புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் தீபக்குமார்(29), கரூர் மாவட்டம், புகளூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மகிமா(24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது.
ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்காக அவர்கள் குடும்பத்தினருடன் ஜேடர்பாளையம் காவிரியாற்றுக்கு சென்றனர். ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் அருகில் இருந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர், முளைப்பாரி விடுவதற்காக தீபக்குமாரின் சகோதரி குழந்தையுடன் காவிரி ஆற்றில் இறங்கினார். அப்போது, ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்கள் இருவரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட னர்.
இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த தீபக்குமார் தண்ணீரில் குதித்து அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தார். இந்நிலையில், எதிர் பாராதவிதமாக தீபக்குமார் ஆழமான பகுதியில் ஆற்றுச்சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் சத்தம் போட்டு அப்பகுதியில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.
அங்கிருந்த மீனவர்கள் பரிசல் மூலம் ஆற்றில் சென்று அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் ஆற்று வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், மீனவர்கள் சுமார் ஒருமணி நேரம் ஆற்றுக்குள்ள தேடினர். பின்னர் அவர் உடல் சடமாக மீட்கப்பட்டது. இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி ஒரே மாதமான புதுபாப்பிள்ளை ஒருவர், தன் தங்கை, குழந்தைகளுக்காக தன் உயிரையே கொடுத்து உயிரை விட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.