பரமத்தியில் அரசு ஆஸ்பத்திரி அருகில் மின் மயானம்: பொதுமக்கள் எதிர்ப்பு
பரமத்தியில் அரசு ஆஸ்பத்திரி அருகே, மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.;
பரமத்தி அரசு ஆஸ்பத்திரி அருகில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி டவுன் பஞ்சாயத்தில், நாமக்கல் செல்லும் மெயின் ரோட்டில், அரசு ஆஸ்பத்திரி மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அருகே, ஏற்கனவே மயானம் உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடல்களை புதைத்தும், எரியூட்டியும் வருகின்றனர்.
இப்பகுதியில் மின் மயானம் அமைக்க பரமத்தி டவுன் பஞ்சாயத்து ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டன. அப்பகுதியில், மின் மயானம் அமைக்க, பரமத்தி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திரளான பொதுமக்கள் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டவுன் பஞ்சாயத்து தலைவர் மணி, செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயானத்தை ஒட்டி அரசு ஆஸ்பத்திரி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளதால், இப்பகுதியில், மின் மயானம் அமைக்கப்பட்டால் காற்று மாசு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த இடத்தில் மின் மயானம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த இடத்தில் மின் மயானம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்துவதாக, டவுன் பஞ்சாயத்து தலைவர் மணி உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.