ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-06-17 11:28 GMT

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த அணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கென தனியாக மதகுகள் அமைக்கப்பட்டு தண்ணீரை பிரித்து நன்செய் இடையாறு வரை பாசனத்திற்காக அனுப்பப்படுகிறது. கொமராபாளையம், பொய்யேரி, மோகனூர் ஆகிய வாய்க்கால்கள் இந்த ராஜ வாய்க்காலில் இருந்து தனியோ பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இப்பகுதியில், நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், கோரை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. ராஜ வாய்க்கால் தூர்வாரல், பராமரிப்புப் பணிக்காக ஒவ்வொரு ஆண்டும். முன்கூட்டியே அறிவிப்பு செய்து, 15 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு திடீரென ராஜ வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பாசன வசதி பெறும் பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டது. வாடும் பயிர்களைக் காக்க ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என ராஜ, கொமராபாளையம், பொய்யேரி, மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில், கடந்த 12ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 14ம் தேதி ஜேடர்பாளையம் தடுப்பணையை வந்தடைந்தது. தற்போது போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் 16ம் தேதி முதல் ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலில் பாசனத்திற்காக தணீணர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ராஜ, கொமராபாளையம், பொய்யேரி, மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News