தனியார் டெலிகாம் நிறுவனத்தினர் தோண்டிய பள்ளம்: பொதுமக்கள் பாதிப்பு
ப.வேலூர் பகுதியில் தனியார் டெலிகாம் நிறுவனத்தினர் கேபிள் பதிப்பதற்காக ரோட்டில் தோண்டிய பெரிய பள்ளங்களால் போக்குவரத்து பாதிப்பு.
பரமத்தி வேலூர் ஹைஸ்கூல் ரோடு பகுதியில், தனியார் டெலிகாம் நிறுவனம் சார்பில் கேபிள் பதிப்பதற்காக, டவுன் பஞ்சாயத்து அனுமதி பெற்று ரோட்டின் ஒரத்தில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பள்ளங்கள் தோண்டி 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவை மூடப்படவில்லை. இதனால் அந்த ரோட்டில் நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி ரோட்டிலேயே நிறுத்திச் செல்வதால், ஹைஸ்கூல் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இது குறித்து வர்த்தகர் சங்கத்தினரும், பொதுமக்களும் பல முறை வேண்டுகோள் விடுத்தும், தனியார் நிறுவனத்தினர் கேபிள் பதிக்க தோண்டிய பள்ளங்களை சரி செய்யவில்லை. எனவே இது குறித்து டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஹைஸ்கூல் ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.