மோகனூர் அருகே முன்னாள் ராணுவவீரர் கத்தியால் குத்தி படுகொலை
மோகனூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசிகுமரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (40). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பினார். அவரது மனைவி பார்கவி (26). அவர்களுக்கு லினிசா (4) என்ற பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று மாலை 6 மணியளவில் சிவகுமார், மோகனூர் அருகே மல்லுமாச்சம்பட்டியில் உள்ள தனது அக்கா சித்ரா வீட்டுக்கு தனது மொபட்டில் சென்றார். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்ட அவர், வீடு வந்து சேரவில்லை. இந்த நிலையில் அடுத்தநாள் காலை 7 மணிக்கு ரோட்டின் ஓரம் தனது மொபட்டுக்கு அருகில் உடம்பில் கத்திக்குத்து காயங்களுடன் சிவக்குமார் சடலமாக கிடப்பதை பார்த்த பொதுமக்கள், மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு டிஎஸ்பிக்கள் நாமக்கல் சுரேஷ், பரமத்திவேலூர் ராஜாரணவீரன், நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து, மோகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பணி ஓய்வு பெற்ற 4 மாதத்தில், முன்னாள் ராணுவவீரர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.