கபிலர்மலை கோயில் தேர் திருப்பணியில் முறைகேடு: அறநிலையத்துறை அலுவலர் சஸ்பெண்ட்
கோயில் நிர்வாகத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்த கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவில் உட்பட அப்பகுதியில் உள்ள 12 கோயில்களின் செயல் அலுவலராக கலைவாணி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கபிலர்மலை கோவில் திருத்தேர் சீரமைக்கும் பணி பொதுமக்களின் நன்கொடை மூலம் நடைபெற்றது. ஆனால், செயல் அலுவலர் கலைவாணி, இந்து சமய அறநிலையத்துறை நிதியை, திருத்தேர் திருப்பணிக்கு பயன்படுத்தி சீரமைத்ததாக கணக்கு காட்டி, பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
மேலும், அவரது கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களின் வரவு, செலவு கணக்குகளிலும் முறைகேடு செய்ததாகவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. அதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், செயல் அலுவலர் கலைவாணி ஒரு மாதம் லீவில் சென்று விட்டார். அதிகாரிகள் நடத்திய விசாணையில் கோயில் செயல் அலுவலர் கலைவாணி முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஈரோடு மண்டல அறநிலையத்துறை இணை இயக்குனர் மங்கையர்க்கரசி, கபிலர்மலை கோயில் செயல் அலுவலர் கலைவாணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.