ப.வேலூர் அருகே அதிகாரிபோல் நடித்து 7 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது
ப.வேலூர் அருகே அதிகாரிபோல் நடித்து 7 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
பரமத்திவேலூர் அருகே உள்ள சோழசிராமணியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் அதே ஊரில் மளிகைக்கடை வைத்துள்ளார். அவருடைய மனைவி தனலட்சுமி (60). சம்பவத்தன்று காலை, தனலட்சுமி மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அவரிடம், தான் புகையிலை தடுப்பு அதிகாரி என்றும், உங்களது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளதால் சோதனை நடத்த வந்துள்ளேன் என்று கூறினார்.
இதற்கு தனலட்சுமி, அவரிடம் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்று கூறினார். இருந்தாலும் அந்த மர்ம நபர் மளிகை கடை மற்றும் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது அவர் வீட்டின் பீரோவில் இருந்த 7 பவுன் நகையை நைசாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
பின்னர் நகை திருட்டுப் போனது தெரிந்த தனலட்சுமி, இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதிகாரிபோல் நடித்து, வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது பள்ளிபாளையம் சின்னவீதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.