பரமத்திவேலூரில் மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை

Namakkal News Today- பரமத்திவேலூர் பகுதியில் மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-01 05:00 GMT

Namakkal News Today- பரமத்தி வேலூரில் வெற்றிலை விவசாயிகள் சங்க 45 ஆவது பேரவைக் கூட்டம் அதன் தலைவர் நடேசன் தலமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கம் முன்னாள் நிறுவனர் வக்கீல் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

வெற்றிலைக்கு, இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க ப.வேலூர் பகுதியில் வெற்றிலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். வெற்றிலைக் கொடிக்கால் வாடல் நோய் ஆராய்ச்சி மையம் ஏற்கனவே, பொத்தனூரில் செயல்பட்டு வந்தது, பின்னர் அது சிறுகமணிக்கு மாற்றப்பட்டது. இப்பொழுது கோயம்புத்தூரில் செயல்பட்டு வருகிறது. இதை மீண்டும் ப.வேலூருக்கு மாற்றியமைக்க வேண்டும். இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் இருக்கூர் கிராமத்தில் 7 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஒதுக்கப்ட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்க அரசு உத்தரவிட வேண்டும்.

குத்தகை விவசாயிகள் உட்பட, அனைத்து வெற்றிலை விவசாயிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் பயிர் கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் அதிகப்படியான காற்று போன்ற இயற்கை இடர்பாடுகளால், வெற்றிலை கொடிக்கால்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது இந்தப் பேரிடர் காலங்களில் வெற்றிலைப்யிர்களுக்கு, இலவச பயிர் இன்சூரன்ஸ் செய்து தர வேண்டும். வெற்றிலை விவசாயிகளுக்கு நல வாரியம் ஒன்றை அரசு ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். வெற்றிலை சாறு தயாரித்து மருத்துவத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் சங்க செயலாளர் எம்.வையாபுரி, பொருளாளர் ராசப்பன் உள்ளிட்ட திரளான வெற்றிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News