காவிரியில் வெள்ளம்: நிரம்பி வழியும் ஜேடர்பாளையம் தடுப்பணை
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஜேடர்பாளையம் தடுப்பணை நிரம்பி வழிகிறது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்காவில், காவிரியின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இங்கிருந்து பாசனத்திற்காக ராஜாவாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் பிரிக்கப்பட்டு தண்ணீர் செல்கிறது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையாலும், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு வினாடிக்கு சுமார் 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் முழு கொள்ளளவையும் தாண்டி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
கூடுதல் தண்ணீர் வரத்தால், தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் ராஜ வாய்க்கால் மதகின் மேற்பகுதிவரை, தண்ணீர் வழிந்து வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக பாய்ந்தோடுகிறது. இதனால் ராஜவாய்க்காலின் கிளை வாய்க்கால்களான கொமராபாளையம், பொய்யேரி, மோகனூர் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்கிறது. கடைமடைப் பகுதி வரை தண்ணீர் வேகமாக செல்வதால், வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனார்.
காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அனிச்சம்பாளையத்தில் இருந்து, கரூர் மாவட்டம், புஞ்சை புகளூர் இடையே, தற்போது கட்டப்பட்டு வரும், புதிய தடுப்பணை பணிகளை விரைந்து முடித்தால், கூடுதலாக தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் முடியும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.