திருச்செங்கோட்டில் போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு

திருச்செங்கோடு நகரில் மருந்துக்கடையில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-07-14 10:30 GMT

திருச்செங்கோட்டில், போலி டாக்டரின் மருந்துக்கடையில், சோதனை செய்த மருத்துவக்குழுவினர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பள்ளிபாளையம் ரோட்டில், போலீஸ் குடியிருப்பு அருகில் செயல்பட்டு வரும் மருந்துக்கடையில், அதன் உரிமையாளர் மோகன்ராஜ் என்பவர், பெதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா காலத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி மருந்துகளை விற்பனை செய்ததாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.

இதையொட்டி,  கலெக்டர் ஸ்ரேயாசிங், போலி டாக்டர்களை கண்டறியும் குழுவினரை சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி,  திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் தேன்மொழி தலைமையிலான குழுவினர், அந்த மருந்துக்கடைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, கடை உரிமையாளர் மோகன்ராஜ் என்பவர் போலியாக வைத்தியம் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. மருத்துவம் படிக்காமல், லேப் அசிஸ்டென்ட் பயிற்சி படித்துவிட்டு டாக்டராக செல்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்துக்கடையில் பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் நோயாளிகளுக்கு பயன்படுத்த தயார் நிலையில் இருந்த மருந்துடன் கூடிய ஊசி மற்றும் சிரிஞ்சுகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மோகன்ராஜ் மீது, போலி மருத்துவர்களை தடுக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டப்படியும் மற்றும் இந்திய தண்டனை சட்டப்படியும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில், இதுபோன்ற தவறான நபர்கள் சிகிச்சை அளிப்பது தெரியவந்தால், உடனடியாக 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News