நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பட துவங்கும்; எம்.பி., தகவல்
Namakkal News- நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி விரைவில் சுயமாக செயல்பட துவங்கும் என அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.;
Namakkal News, Namakkal News Today- நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி விரைவில் சுயமாக செயல்பட துவங்கும் என அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 2வது, சிறப்பு பேரவைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. வங்கியின் செயலாட்சியரும், மாவட்ட கலெக்டருமான உமா முன்னிலை வகித்தார்.
வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்திற்கு, புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டு வங்கி துவங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் கூட்டுறவு சங்கங்கள்தான். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனியாக உருவாக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சி அடைய கடன் உதவிகள் பெற உதவியாக இருக்கும். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற, சென்னையிலிருந்து நபார்டு வங்கியின் மூலம் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கபெற்று வங்கி சுயமாக செயல்பட துவங்கும்.
மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஒரு மாவட்டத்திற்கு 1 மத்திய கூட்டுறவு வங்கி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி முதல் மாவட்டமாக நம் நாமக்கல் மாவடத்திலிருந்து தான் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் பிற மாநிலங்களில் உள்ள வருவாய் மாவட்டங்களில் மத்திய கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ராசிபுரத்தில் சுமார் ரூ.850 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம், போதமலைக்கு ரூ. 140 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராசிபுரத்திற்கு தலைமை மருத்துவமனை, போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்த ரூ. 196 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் பதிய பைபாஸ் திட்டம், புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கல்வி நிலையங்கள் அதிகம் உள்ள மாவட்டம் ஆகும். எனவே படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் 854 ஹெக்டர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அரசு உத்தவு வெளியிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என கூறினார்.
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நாமக்கல் கிளை மற்றும் தலைமை அலுவலக கட்டிடம் கட்ட பெரியப்பட்டி கிராமத்தில் நிலத்தினை, நில உரிமை மாற்றம் செய்து தரக்கோருதல் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு, ஆவின் பொது மேலாளர் .சண்முகம், டிசிஎம்எஸ் சங்க இணைப்பதிவாளர் விஜயசக்தி, நாமக்கல் சரக துணைப்பதிவாளர் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.