தடுப்பூசி போடும் விவரத்தை வெளியிடலாமே: பள்ளிபாளையம் மக்கள் எதிர்பார்ப்பு

கொரோனா தடுப்பூசி போடும் நாட்கள் சரிவர தெரியவில்லை; சுகாதார நிலையத்தில் இதுபற்றி அறிவிப்பை வைக்க வேண்டும் என்று, பள்ளிபாளையம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.;

Update: 2021-06-18 14:55 GMT

தடுப்பு ஊசிகள் போடப்படுமா!? இல்லையா? என தெரியாமல் குழப்பத்துடன் அதிகாலையிலேயே பள்ளிபாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் ஆவரங்காடு நகர ஆரம்ப சுகாதார நிலையம், அருகில் உள்ள எலந்தகுட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்ச்சியாக போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகள் தினமும் போடப்பட்டு வந்தாலும், சில நாட்களில் இது நிறுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு என்றைக்கு தடுப்பூசி போடப்படுகிறது, என்றைக்கு நிறுத்தப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பும், தகவலும் சுகாதார நிலையங்கள் முன்பு வெளியிடப்படுவதில்லை. தினந்தோறும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகாலை முதலே காத்துக் கிடக்கும் மக்கள், பின்னர் தடுப்பூசி இல்லை என்று தெரிந்ததும், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், தடுப்பூசி தட்டுப்பாட்டால் அதிகாலை முதலே வந்து காத்து இருக்கிறோம். அதன் பிறகு வரும் மருத்துவ ஊழியர்கள் தடுப்பூசி வரவில்லை என்று திருப்பி அனுப்புகின்றனர். சரியான, முறையான அறிவிப்போ, தகவலோ இல்லை. எனவே மருத்துவமனை வளாகப் பகுதியில்  அறிவிப்பு பலகை அமைத்து, தடுப்பூசி போடப்படும் விவரத்தை வெளியிட வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News