புகார் கொடுக்க வந்த மூதாட்டியை தள்ளி விட்ட போலீசார்: கிரைம் செய்திகள்..

பள்ளிபாளையத்தில் புகார் கொடுக்க வந்த மூதாட்டியை போலீசார் தள்ளி விட்ட வீடியோ வைரலாகப் பரவி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-03-07 16:00 GMT

பைல் படம்.

பள்ளிபாளையம் அருகே கண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள், 82. இவரது கணவர் பல வருடங்கள் முன்பு இறந்து விட்டார். இவரது மகன்கள் ஆதரவில் வாழ்ந்து வந்தார். சில நாட்களாக யாரும் உணவு உள்ளிட்ட எந்த உதவியும் செய்வதில்லை என்பதால் பள்ளிபாளையம் போலீசார் வசம் புகார் கொடுக்க வந்தார். பல நாட்கள் அலைகழித்து விட்ட நிலையில், நேற்றும் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுக்க வர, அங்கிருந்த போலீசார் வெளியில் தள்ளி விட்டனர். இதனால் அவர் அழுதபடி அங்குள்ள பொதுமக்களிடம் சொல்ல, பொதுமக்கள் எடுத்த வீடியோ அனைத்து வாட்ஸ் குரூப்களில் பரவியது. இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற மகன்கள் மீதும், போலீசார் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சைக்கிள் பட்டப்பகலில் திருட்டு

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் அருகே மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் முன்பு ஆசிரியர்களின் டூவீலர்கள் மற்றும் மாணவர்களின் சைக்கிள்கள் நிறுத்த ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் 12:00 மணியளவில் பள்ளி முன்பு ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை மர்ம நபர் திருடி சென்றார். இது பற்றி குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் சோதனை செய்த போது, சுமார் 25 வயது இளைஞர் ஒருவர் சைக்கிளை, பூட்டை உடைத்து திருடி செல்வது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர்.

சரக்கு வாகனம், டூவீலர் மோதி விபத்து: இருவர் படுகாயம்

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன், 72. கூலி. இவரும், இவரது மனைவி பூங்கொடி, 67, இருவரும், குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த உறவினரை காண வந்து விட்டு, திரும்ப ஊர் செல்வதற்காக, சேலம், கோவை புறவழிச்சாலை, கரியகாளியம்மன் மணல் அலுவலகம் அருகே, தனது டி.வி.எஸ். எக்ஸல் சூப்பர் வாகனத்தை தான் ஓட்ட, பின்னால் பூங்கொடி உட்கார்ந்து வர, சாலையை கடக்கும் போது, அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம், இவர்கள் வாகனம் மீது மோத, இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரும் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் பொள்ளாச்சியை சேர்ந்த விஜயகுமார், 25, என்பவரை கைது செய்தனர்

அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது

குமாரபாளையம் கோட்டைமேடு உள்ளிட்ட பல பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் கோட்டைமேடு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது போலீசார், கதிர்வேல், 42, சிதம்பரம், 54, வேலுமணி, 56, முருகேசன், 45, முருகன், 52, ஆகிய மது விற்ற நபர்களை பிடித்து, அவர்களிடமிருந்த 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

விஷமருந்தி வாட்ச்மேன் தற்கொலை

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம், 67. ஈரோடு மாவட்டம், காஞ்சிகோயில் பகுதியில் வாட்ச்மேன் வேலை. குடிப்பழக்கம் உள்ளவர். வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் திட்டியுள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை 01:00 மணியளவில் குடித்து விட்டு, வீட்டின் முன்பு படுத்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று படுக்கச்சொல்லி அவரது குடும்பத்தினர் சொல்லியுள்ளனர். வீட்டின் உள்ளே வந்து படுத்தவர் வாந்தி எடுக்க, அவரிடம் கேட்ட போது, விஷமருந்தி விட்டதாக கூறியுள்ளார். உடனே இவரை குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை 03:45 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News