பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தையில் பங்கேற்காத ஜவுளி உற்பத்தியாளர்கள்

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்காக நடைபெற்ற பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை.

Update: 2023-01-12 01:06 GMT

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற போனஸ் பேச்சுவார்த்தை.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர்.. இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக உள்ள நிலையில் தொழிற்சங்கத்தினர் கேட்ட 20 சதவீதம் போனஸ் தருவது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என கூறப்பட்டது.

அதன்பின் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கடந்த ஆண்டு வழங்கிய 8.15 சதவீத போனஸ் தருகிறோம், என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூற, உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. நேற்று தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல், தொழிலாளர் நல ஆய்வாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை. மீண்டும் ஜன. 13 பிற்பகல் 12:30 மணியளவில் போனஸ் பேச்சுவார்த்தை தாலுக்கா அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறுகையில், தாலுக்கா அலுவலக கூட்டம் சம்பந்தமான கடிதம் தாமதமாக கிடைத்தது. சங்க நிர்வாகிகள் பலரும் வெளியூர் சென்று இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனக் கூறினார்.

தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் போனஸ் என்றால் இழுபறிதான். அரசு சார்பில் வழங்கப்படும் போனஸ் போல், விசைத்தறி தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு இவ்வளவு போனஸ் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்ய வேண்டும். நம் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கணக்கிட்டு போனஸ் வழங்க விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் இவ்வளவு யோசிப்பது எங்களை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அரசு அதிகாரிகளின் முன்புதான் பேச வேண்டுமா? தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு தாங்களாகவே போனஸ் வழங்க வேண்டும்.

உங்களை நம்பி வாழும் எங்களுக்கு உரிமையாளர்கள் காட்டும் விசுவாசம், நம்பிக்கை இழக்க செய்கிறது. விரைவில் உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு சுமுகமான முறையில் போனஸ் குறித்து நல்ல பதில் சொல்வார்கள் என நம்பியுள்ளோம் என கூறினர்.

இதில் எஸ்.ஐ. மலர்விழி, தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமகிருஷ்ணன், பாலுசாமி, வெங்கடேசன், செல்வராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News