கணவரும், நானும் சாக்கடையை சுத்தம் செய்கிறோம் - தி.மு.க. கவுன்சிலர் பகீர் புகார்
குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.
கணவரும், நானும் சாக்கடையை சுத்தம் செய்கிறோம் தி.மு.க. கவுன்சிலர் பகீர் புகார்
குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:
புருஷோத்தமன் : (அ.தி.மு.க.)
நகராட்சி அருகில் இருக்கும் ஊராட்சி பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கும் போது, எது மாதிரியான பகுதிகள் இணைக்கப்படும்?
ராஜேந்திரன் (பொறியாளர்):
நகராட்சி எல்லைக்கு அருகில் உள்ள ஊராட்சி பகுதிகள் இணைக்க சொல்லி அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
விஜய்கண்ணன் (தலைவர்):
அரசு வழிகாட்டுதல் படி ஊராட்சி பகுதிகள் எடுக்க உள்ளோம். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பப்பட்டு, அரசின் உத்திரவின் பேரில் இணைக்கும் பணிகள் நடைபெறும்.
வேல்முருகன் (சுயேட்சை):
எனது வார்டில் வடிகால் கட்ட பள்ளம் தோண்டப்பட்டு ஆறு மாதங்கள் ஆனது. இன்னும் கட்டப்படாததால், மக்கள் என் வீட்டு வாசலில் தினமும் வந்து நின்று கேள்வி கேட்டு வருகிறார்கள். வடிகால் மற்றும் சாலை அமைக்கவில்லை. எங்கள் பகுதி மக்களை நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட சொல்லலாமா? 24 நாட்களாக குப்பை அள்ள யாரும் வரவில்லை. நான் ராஜினாமா செய்து விட்டு போகலாமா என்று உள்ளேன். நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான கூட்டம் மாதம் தோறும் நடத்துங்கள்.
ராஜேந்திரன் (பொறியாளர்):
10 நாட்களில் சாலை, வடிகால் அமைக்கும் பணி துவங்கி விடும்.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.):
எவ்வளவு வேலை இருந்தாலும் இதுவரை நாங்கள் கவுன்சிலராக இதற்கு முன்பு இருந்த போது, ஒவ்வொரு மாதமும் தவறாமல் நகராட்சி கூட்டம் நடக்கும். அப்படி நடத்தினால்தான் வார்டு பிரச்சைனைகள் அவ்வப்போது தீர்த்து வைக்க முடியும். இடைவெளி விட்டு கூட்டம் நடத்தினால் பிரச்சனை அதிகம் தான் ஆகும்.
ராஜேந்திரன் (பொறியாளர்):
நகராட்சி வரி நிலுவை ஐந்து கோடியே 35 லட்சம் ரூபாய் உள்ளது.
தர்மராஜ் (தி.மு.க.)
அம்மன் நகர் பகுதியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. குண்டும் குழியுமாக இருத்க போது கூட வாகனங்கள் போய் கொண்டு இருந்தது. ஜல்லி கொட்டி பல நாட்கள் ஆகியும் சாலை அமைக்காமல் இருப்பதால், யாரும் அவ்வழியே போக முடியாமல் உள்ளது.
கதிரவன் (தி.மு.க):
அரசு கல்வியியல் கல்லூரி சாலையில் குப்பைகள் எடுப்பது இல்லை. மாத கணக்கில் தேங்கியுள்ளது. தூய்மை பணியாளர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து வருகிறார்கள். இதனால் பணிகள் நடப்பது இல்லை.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க)
நகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்த வரை, தூய்மை பணிகள் நல்ல முறையில் நடந்தது. தனியார் ஒப்பந்த பணியாளர்கள் செய்வது சரி இல்லை.
பரிமளம் (தி.மு.க.)
எங்கள் வார்டில் சாக்கடையை நானும், என் கணவரும் தான் சுத்தம் செய்கிறோம். யாரும் வருவது இல்லை.
புருஷோத்தமன் (அ.தி.மு.க.):
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய தாலுக்கா அலுவலக கட்டிட பணி, முடிந்து பல மாதங்கள் ஆகியும், இன்னும் திறப்புவிழா நடக்காமல் உள்ளது. நடக்குமா? இல்லையா?
ராஜேந்திரன் (பொறியாளர்):
விரைவில் நடக்கும்.
ஜேம்ஸ்(தி.மு.க):
அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி துவங்கும் முன்பும், பள்ளி முடியும் முன்பும் ஆட்டோ ஓட்டுனர்கள் வரிசையாக நிறுத்திக்கொள்வதால், மாணவ, மாணவியர் குறுகிய சாலையில் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. ஆனங்கூர் பிரிவு சாலையில் போலீஸ் நிறுத்த வேண்டும் என்று பல முறை கேட்டும் பலனில்லை. அடிக்கடி மாணவ, மாணவியர்கள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். மிகவும் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து போலீசாருக்கும் நமது ஊருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
பழனிசாமி (அ.தி.மு.க.)
பள்ளி நேரங்களில் லாரி, சரக்கு வாகனங்கள் அவ்வழியே வர தடை விதிக்க வேண்டும். குமாரபாளையம் நகராட்சி, கொமாரபாளையம் நகராட்சி. இதில் உள்ள குழப்பம் எப்போது தீரும்? விரைவில் இதற்கொரு முடிவினை ஏற்படுத்த வேண்டும்.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.) :
ஊராட்சி பகுதிகளை இணைக்கும் தீர்மானம் ஒத்தி வைக்க வேண்டுகிறேன். நிதி இல்லை என்கிறீர்கள். தற்போது ஆளும் கட்சி உங்கள் கட்சி. நேரில் போய் நிதி பெற்று வந்து நகராட்சி பணிகளை செய்ய வேண்டியதுதானே?
விஜய்கண்ணன் (தலைவர்):
70 கோடி ரூபாய் வாங்கி வந்து உள்ளோம். இன்னும் வடிகால், சாலை அமைக்க 30 கோடி தேவை என்று கேட்க, விரைவில் போக உள்ளோம்.
வெங்கடேசன் (தி.மு.க. நகராட்சி துணை தலைவர்):
தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் தேதி அறிவித்து விட்டால், நகராட்சி கூட்டம் ஓரிரு மாதங்கள் நடத்த முடியாது. அதற்கு முன்பே, பணிகள் செய்யவும், நிதி ஒதுக்கீடு பெறவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து வாக்குகள் கேட்பது எளிதாகும்.
கதிரவன் (தி.மு.க.):
சாலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.
விஜய்கண்ணன் (தலைவர் ):
நீங்கள் எழுத்து மூலமாக கடிதம் தந்தால் ஆக்கிரமிப்பு எடுக்கலாம்.
இவ்வாறு விவாதங்கள் நடந்து, சாதாரண கூட்ட தீர்மானங்கள் 35, அவசர கூட்ட தீர்மானங்கள் 17 மொத்தம் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் சத்தியசீலன், பரிமளம், ராஜ், நாகநந்தினி, புஷ்பா, விஜயா, மகேஸ்வரி, அழகேசன், நந்தினிதேவி, கனகலட்சுமி, ரங்கநாதன், ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.