குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்காக நடைபெற்ற பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

Update: 2023-01-14 00:30 GMT

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக உள்ள நிலையில் தொழிற்சங்கத்தினர் கேட்ட 20 சதவீதம் போனஸ் தருவது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என கூறப்பட்டது.

அதன்பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த ஆண்டு வழங்கிய 8.15 சதவீத போனஸ் தருகிறோம் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூற, உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. நேற்றுமுன்தினம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல், தொழிலாளர் நல ஆய்வாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. மீண்டும் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்று, தங்கள் தரப்பில் 8.15 சதவீதம் மட்டுமே தர முடியும் என்று கூறியதால், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் உடன்படவில்லை. மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இது குறித்து ஏ.ஐ.சி.சி.டி.யூ. விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஜன. 23 முதல் எங்கள் சங்கம் சார்பில் 20 சதவீத போனஸ், 80 சதவீத கூலி உயர்வு வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம் என்றார்.

முற்போக்கு பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில துணை தலைவர் செல்வராஜ் கூறுகையில், விசைத்தறி தொழிலாளர்கள் சார்பில் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. போனஸ், கூலி உயர்வு, பி.எப், பணம் பிடித்தம், ஈ.எஸ்.ஐ.மருத்துவ காப்பீடு, அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி திருச்செங்கோடு கோட்டாச்சியர் தலைமையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது என்றார்.

இதில் எஸ்.ஐ. மலர்விழி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன், நிர்வாகிகள் சுந்தரராஜ், ராஜேந்திரன், குமாரசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமகிருஷ்ணன், பாலுசாமி, வெங்கடேசன், செல்வராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News