பள்ளிபாளையத்தில் தவறாக அனுப்பப்பட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பள்ளிபாளையத்தில் தவறாக அனுப்பப்பட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.;

Update: 2023-04-13 01:30 GMT

பள்ளிபாளையத்தில் தவறாக அனுப்பப்பட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் வயது 32. இவர் ஈரோட்டில் உள்ள தனியார் சைசிங் மில்லில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் நான்காம் தேதி இவருக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஜிபே அக்கவுண்டிற்கு, சுமார் 31,320 ரூபாய் பணம் அனுப்பப்பட்டிருந்தது. பெருமாளும் தனது அக்கவுண்டில் பணம் வந்ததை கவனிக்காமல் இருந்துள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மதுரை வடக்கு பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் 52 என்பவர் பெருமாளுக்கு போன் செய்துள்ளார். தான் மதுரையில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது தொண்டு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டிய பணத்தை தவறுதலாக இந்த எண்ணிற்கு பணத்தை அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்டுள்ளார்.

சமீப காலமாக, தெரியாத எண்ணில் இருந்து பணம் அனுப்பி மீண்டும் தங்கள் அக்கவுண்டிற்கு பணத்தை திருப்பி அனுப்ப கேட்டு, ஒட்டுமொத்தமாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் போக்கு அதிகரித்துள்ளதால், பெருமாள் பணத்தை அனுப்புவதற்கு தயக்கம் காட்டினார்.

தொடர்ந்து வெங்கடேசன் தரப்பிலிருந்து பணத்தை தர வேண்டுமென நெருக்கடி தரப்படவே, பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு வந்தால் தருகிறேன் எனக் கூறி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்த விபரங்களை பெருமாள் தெரிவித்தார்.

பள்ளிபாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரகுமார், துணை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வங்கி பரிவர்த்தனை கணக்கு விவரங்களையும் பார்த்தபோது தவறுதலாக பணம் அனுப்பப்பட்டதை காவல் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனை அடுத்து மதுரையில் இருந்த வெங்கடேசனை பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் வரவழைத்தனர். காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் தவறுதலாக அனுப்பப்பட்ட வெங்கடேசன் அவர்களின் பணம் 31,320 ரூபாயை முழுமையாக ஒப்படைத்தார்.

பணத்தை நேர்மையாக வழங்கிய பெருமாளுக்கு போலீசார் பாராட்டுகளையும், தவறுதலாக பணத்தை அனுப்பிய வெங்கடேசனுக்கு அறிவுரைகளையும் வழங்கினர்.

மேலும் இது குறித்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் கூறும்போது, சமீப காலமாக தெரியாத எண்ணில் இருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டு திரும்ப அனுப்ப சொல்லி, வங்கிக் கணக்கை ஹேக் செய்யும் கும்பல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிச் செல்வது அதிகரித்து வருகிறது.

அதேநேரம் தற்போது நடந்திருக்கும் நிகழ்வானது பாராட்டுக்குரிய விஷயம் என்பதோடு இல்லாமல், விழிப்புணர்வு நிகழ்வாகவும் நாம் பார்க்க வேண்டும் அப்படி தவறுதலாக யார் பணம் அனுப்பி இருந்தாலும், தைரியமாக காவல் நிலையத்தை அணுகி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது .

அதே நேரத்தில் தவறுதலாக அனுப்பப்பட்டாலும் அது மற்றவர்களுடைய பணம் என்பதை உணர்ந்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு மூலம் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வங்கி கணக்கை பயன்படுத்தி பணத்தை அனுப்பும் பொழுது சரியான விபரங்களுடன் சரியான எண்ணிற்கு தான் பணத்தை அனுப்புகிறோமா என்பதையும் நிதானித்து அனுப்பினால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.

இதுகுறித்து பணத்தை திரும்ப வழங்கிய பெருமாள் கூறும் போது சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக பணத்தை திருடும் போக்கு அதிகரித்துள்ளது... எனது அக்கவுண்டிற்கு ஃபோன் பே மூலமாக தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாக கூறி மதுரையில் இருந்து வெங்கடேஷன் என்பவர் எனக்கு அழைத்துப் பணத்தை திரும்ப அனுப்பச் சொன்னார். ஆனால் தவறுதலாக வந்த பணத்தை திருப்பி அப்படியே அனுப்புவது பொருத்தமாகவும் சரியானதாகவும் இருக்காது என்பதால் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து தெரிவித்தேன்.மேலும் ஒருவித அச்சத்தின் காரணமாகவும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு இதன் மூலமாக ஏற்பட வேண்டும் என்பதற்காக காவல் நிலையம் வாயிலாக பணத்தை ஒப்படைத்தேன். பள்ளிபாளையம் காவல் நிலையத்திலும் நல்ல ஒத்துழைப்பு இருந்ததாகவும் தெரிவித்தார்.

பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெருமாளுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News