குமாரபாளையம் தொகுதியில் மருத்துவ கல்லூரி : சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா உறுதி
குமாரபாளையம் தொகுதியில் மருத்துவ கல்லூரி கொண்டுவரப்படும் என்று சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி அளித்தார்.;
குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் வைரம் சின்னத்தில்போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா நகரப்பகுதியில் வீதி வீதியாகவும், கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று குமாரபாளையம் நகராட்சிப்பகுதியிலுள்ள காட்டூர்,விட்டலபுரி, கத்தாலபேட்டை மற்றும் காளியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பகுதி பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்கள் மத்தியில் அவர் பேசும்போது, ' குமாரபாளையம் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை அமைத்து, மருத்துவ சுற்றுலா வாயிலாக மருத்துவம் சார்ந்த நுண்ணறிவுத்துறையில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்க முயற்சி செய்வேன்.
இளைஞர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தடகள பாதை மற்றும் கால்பந்து மைதானம் அமைத்து கொடுப்பேன். புதிய சாய தொழில் பூங்கா அமைக்கவும், ஆண்டுக்கு 1000பேருக்கு புதிய தொழில் உருவாக்கி தருவதோடு, குடும்பத்திற்கு 2 தறி அமைத்து கொடுத்து சுய தொழில் உருவாக்கித் தருவேன்.
இன்றைய குமாரபாளையம் தொகுதி என் முயற்சியில் குபேரபாளையமாகும். அந்த அளவுக்கு என் பார்வை,என் முயற்சி நல்ல வளர்ச்சியினை நோக்கியதாக இருக்கும். குமாரபாளையம் தொகுதி வளர்ச்சி நிலை அடைய, பொதுமக்கள் எனக்கு வைரம் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெறச்செய்ய வேண்டும். தொகுதிக்கு நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்' என உறுதியளித்தார்.
தொழில் துறையிலும்,கல்வியிலும் சேவை ஆற்றிய நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வந்த நீங்கள் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை, அரசு உதவிகள் கிடைப்பதற்கு வழிகாட்டல் போன்ற பயனுள்ளவைகளை செய்துள்ளீர்கள். அதனால், எங்கள் வாக்கு நிச்சயம் உங்களுக்கே என்று மக்கள் உறுதி அளித்தனர்.