சீர்காழி கொலை, என்கவுன்டர் மூலம் பிடிபட்ட குற்றவாளிகள்

Update: 2021-01-27 08:06 GMT

சீர்காழி அருகே நகை வியாபாரி வீட்டில் புகுந்து இரட்டை கொலை செய்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகை வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது, வியாபாரியின் குடும்பத்தை கொடூரமாக தாக்கியுள்ளனர் . இந்த தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா( 48), மகன் அகில் (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ஆஷா, அகில் ஆகியோரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த வட இந்திய கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது ஒருவரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். எஞ்சிய இரண்டு பேரை கைது செய்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 16 கிலோ நகைகளை மீட்டனர் . சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த சீர்காழி காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News