நாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து
நாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.;
கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் சுற்றுலா வந்தனர்.
நாகூர் தர்காவில் வழிபாடு முடிந்த பின்னர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றனர். அப்போது கருவேலங்கடை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் தலைகீழ் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். தலைகீழ் கவிழ்ந்த வேனில் சிக்கியவர்களை அவ்வழியே சென்ற பொதுமக்கள் மீட்டு இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து நடந்த வழியாக நண்பர்களோடு வேளாங்கண்ணி சுற்றுலா சென்ற மருத்துவர் ஞானசேகர் என்பவர் அனைவருக்கும் முதலுதவி பார்த்து ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பும் வரை உதவி செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.