வேளாங்கண்ணியில் திருடி செல்லப்பட்ட வேன் திருச்சியில் மீட்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருடி செல்லப்பட்ட வேனை போலீசார் திருச்சியில் மீட்டு அதனை கடத்தியவரை கைது செய்தனர்.

Update: 2021-11-19 08:20 GMT
திருச்சியில் மீட்கப்பட்ட வேன்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த மடபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். இவர் மார்க்கோ போலோ வாடகை வேன் வைத்து வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் ஸ்டாண்டில் போட்டு வாடகை வேன் ஓட்டி வருகிறார், நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை காலையில் அவர் சென்று பார்த்தபோது காணவில்லை.   அதிர்ச்சியடைந்த சுரேந்தர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்,

அப்போது அந்த வேன் திருச்சி டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் கட்டியதற்கான குறுஞ்செய்தி சுரேந்தர் செல்போனுக்கு வந்துள்ளது.  அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சுங்க சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பார்த்தபோது வேனை இருவர் அதிவேகமாக திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை பறிமுதல் செய்து திருடி சென்ற சென்னையை சேர்த்த சுதாகரை கைது செய்தனர். விசாரணையில் சென்னையை சேர்ந்த சுதாகர் கடந்த மார்ச் மாதம் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா வழக்கில் நாகப்பட்டினத்தில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்திட வந்திருப்பதும் வேளாங்கண்ணியில் விடுதி எடுத்து தங்கிய நிலையில் இன்னொருவருடன் சேர்ந்து கொண்டு இந்த வேனை கடத்திச்சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.


மேலும் டீசல் இல்லாததால் வாகனத்தை திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் பறிமுதல் செய்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.  சுதாகரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News