'தமிழகத்தில் நடப்பது ஆன்மீக ஆட்சி'- அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் நடைபெறுவது ஆன்மீக ஆட்சி என்று நாகையில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி திருக்கோவில், புகழ்பெற்ற எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருவாய்மூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி உள்ளிட்ட ஆலயங்களில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கும்பாபிஷேக விழாவுக்காக எட்டுக்குடி முருகன் கோவிலில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் கூறிய அமைச்சர் சேகர் பாபு, ஒன்றிய அரசின் கொரோனா விதிமுறைகளையே கோவில்களில் தமிழக அரசு பின்பற்றி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்ற நிலை வந்தபின்பு ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து ஆலயங்களின் திருவிழாக்களும் நடத்தப்படும். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவது ஆன்மீக ஆட்சி என்றார்.
கடந்த ஆட்சி போல அரசியல் நெருக்கடிகள் இல்லாத இந்த ஆட்சியில், திருக்குவளை தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் காணாமல் போன மரகத லிங்கம் அறநிலையத்துறையின் சிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓதுவார், அர்ச்சகர், தேவாரம் திருவாசகம் பயிற்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார் மேலும். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் அவரது வாழ்க்கை வரலாற்று கண்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.