நாகை அருகே சார்-பதிவாளர் அலுவலகம் இடம் மாற்றத்தை கண்டித்து சாலை மறியல்
நாகை அருகே சார்பதிவாளர் அலுவலகம் இட மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் திருப்பூண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டியில் 1888ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் தொடர்ந்து 138 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இருபத்தி எட்டு கிராம மக்கள் திருமண பதிவு மற்றும் சொத்து பதிவு உள்ளிட்ட பதிவுகளை மேற்கொள்ள மையப் பகுதியாக இந்த இடம் விளங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை கீழ்வேளூருக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறக் கோரி பொதுமக்கள் அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பூண்டியில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் அமுதா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.