மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் நாகை அரசுப்பள்ளி மாணவி வெற்றி
மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் நாகை அரசு பள்ளி மாணவி வெற்றி பெற்று வெளிநாட்டு சுற்றுலா பயணத்திற்கு தேர்வாகி உள்ளார்.;
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி ,பயிற்சி நிறுவனம் மற்றும் மாநில திட்ட இயக்கம் இணைந்து தமிழகத்தில் உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இணையவழியிலான வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த வினாடி வினா நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதியிலிருந்து தொடங்கி இந்த மாதம் 8-ந்தேதி முடிய இணையவழியில் நடைபெற்றது. இதில் வாரத்தில் சனிக்கிழமை அன்று இந்த இணையவழி வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வரும் டிசம்பர் மாதம் கல்விச் சுற்றுலாவாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் உள்ள துபாய் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மகாதானம் ஊராட்சி கலசம்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பிரவீனா என்ற மாணவி இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்று சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டும் விதமாக பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்மாறன் மற்றும் பள்ளி ஆசிரியை ,ஆசிரியர்கள் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.கிராமப்புற மாணவர்களின் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பாக விமான பயணம் என்பது கனவாகவே இருந்து வரும் நிலையில் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றதன் மூலம் கிராமப்புற மாணவியின் கனவு நனவாகியுள்ளதுங